செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே!
ஆம்! இத்தகைய தேனினும் இனிய தென்னாட்டிலிருந்து ஒரு சொல்லருவியை வானூர்தியில் ஏற்றிவந்து சிட்னி நகரெங்கும் செழித்தோடச் செய்த பெருமை ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தையே சாரும்.
மூன்றாண்டுகளுக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முகமாக பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்திவரும் ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களின் தலைமையில், திரு. பழனியப்பன் மற்றும் எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு அவர்களின் முழு முயற்சியோடு இதன் சங்க உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்போடும் நடைபெற்றது தான் இந்த முத்தமிழ் விழா.
கர்மவீரர் காமராஜரால் 'தமிழருவி' என்று பட்டம் சூட்டப்பெற்ற தமிழகப் பேச்சாளர், தடையற்ற சொல் வீச்சாளர், பதவிக்கும், பொருளுக்கும் மயங்காத பண்பாளர் திரு. தமிழருவி மணியன் அவர்கள் சிட்னிக்கு வருகை தந்து இந்த முப்பெரும் விழாவிலே ஆற்றிய உரையிலிருந்து...
உலகெங்கும் நான் செல்லும் இடமெல்லாம் வாழுகின்ற தமிழர்களிடையே நம் தமிழ்மொழியின் இன்றியமையாமையை குறித்து விளக்கியும், வலியுறுத்தியும் வருகின்றேன். இந்த நாட்டில் ஏறத்தாழ 50 ஆயிரம் தமிழர்கள் வசிப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆயினும், இந்த 50 ஆயிரம் தமிழர்களின் சிந்தனையும் ஒன்றாக இருக்குமா என்பது நமது எண்ணத்தில் எழும் கேள்வி. தாயகத் தமிழகத்திலிருந்து வந்த தமிழர்கள் ஒருபுறமும், இலங்கைத் தமிழர்கள் மறுபுறமுமாக இருப்பதையே நான் காண்கிறேன். இரு பேரும் ஒரு இனம் தான். இவர்கள் பேசுவதெல்லாம் ஒரு மொழிதான். இரண்டு பேரும் பின்பற்றுவது ஒரு பண்பாடுதான். ஆனால் இவர்கள் ஏன் பாலும் நீருமாக இணைந்திருக்காமல், எண்ணையும் தண்ணீருமாக பிரிந்து கிடக்கின்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று தன் மனக் குமுறலை வெளிப்படுத்தி, தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தமது கருத்தை வெளிப்படுத்தினார்.
இவர் தமிழ் மொழி குறித்து பேசுகையில், உலகிலே பேசப்படுகின்ற 6000 மொழிகளிலே 6 மொழிகள்தான் உயர்தனிச் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த ஆறு மொழிகளிலே ஒன்றுதான் நம் தமிழ்மொழி. இந்த தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வரும் தொன்மை வாய்ந்த மொழி. ஆனால், தற்போது தமிழ் நாட்டிலோ ஆங்கிலம் பேசுவது அறிவாளித்தனம், தமிழ் பேசுவது தற்குறித்தனம் என்று சில பேதைகள் பிதற்றுகிறார்கள். இந்தியாவில் உயரிய மொழியாக பெரிதும் போற்றப்பட்ட சமஸ்கிருத மொழி, உயர்சாதிக்காரர்கள் மட்டுமே பேசுவதற்கானது என்று உருவகப்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டபோது இன்று நாளடைவில் சமஸ்கிருதம் காணாமல் போய்விட்டது.
முயற்சியும் பயிற்சியும் இல்லாமல் போனால் மொழி செத்துப்போகும். மனித சமுதாயத்தில் ஒழுங்கை கட்டிக் காப்பதற்கு மதமும், அரசியலும் பெரும்பங்காற்றுகின்றன. இந்த மதமும், அரசியலும் ஒரு சில பின்பற்றுதல்களின் பேரில் நம்மை பின்தொடர்ந்து வருகின்றன. ஆனால், மொழி அப்படியல்ல மொழி - ஒரு இனத்தின் அடையாளம். இத்தகைய மொழி எழுதவும், பேசவும் பழகாது போனால் காலப்போக்கில் காணாமல் மறைந்து போய்விடும்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் தமிழ் இல்லை. ஆங்கில செய்தித்தாள் படிப்பதே கெளரவம் என்றெண்ணும் காலமாகிப்போய்விட்டது. ஒரு முழு வாக்கியத்தை ஆங்கிலக் கலப்பில்லாது தமிழ் வார்த்தைகளால் பேச இயலாத சூழ்நிலையே இன்று நிலவுகிறது. பெற்ற பிள்ளைகள் தம்மை அம்மா, அப்பா என்று அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தமிழர்களே! பிள்ளைகள் உங்களை அம்மா என்றும் அப்பா என்றும் கூப்பிடச் சொல்லிப் பழக்குங்கள். அப்படி அழைக்கின்ற பிள்ளைகளிடம்தான் அன்பு வளரும், பண்பு வளரும், பாசம் வளரும், நேசம் வளரும்.
அம்மா என்றழைப்பதற்கும், அப்பா என்றழைப்பதற்கும் உள்ள தனிச்சிறப்பு தமிழ்மொழியைத் தவிர வேறெந்த மொழியிலும் இல்லை. ஆம் 'அ' என்ற உயிரெழுத்து இந்த உயிரைத் தருபவள் தாய், 'ம்' என்பது மெய்யெழுத்து. 'அ' என்ற உயிர் உறைய 'ம்' என்ற மெய் வேண்டும். இந்த 'ம்' என்ற மெய்யைத்தான் தாய் தன் கருவறையிலே பிள்ளையாக சுமக்கின்றாள். 'மா' என்பது உயிர்மெய் எழுத்து. 'அ' என்ற உயிரும் 'ம்' என்ற மெய்யும், 'மா' என்ற உயிர்மெய் எழுத்தோடு இணைந்து ஒரு உயிர்மெய்யாக- ஒரு உயிர் பெற்ற பிள்ளையாக இந்த உலகிலே உலவவிடுவதால். 'அம்மா' 'அம்மா' என்று அழைக்கும் போதெல்லாம், இந்த உயிரையும், மெய்யையும் தன் கருவறையிலே சுமந்து உயிர்மெய்யாய் இந்த உலகிலே தவழவிட்ட உத்தமத் தாயாய் இந்தப் பிள்ளைகளுக்கு தோன்றுகின்றாள். அதன் பின்னர் தாய்ப்பாசம் என்பது இவர்களைவிட்டு அகலாது என்று தாயின் பெருமைகளை எடுத்துரைத்த வேளையிலே வெளிநாட்டுவாழ் பிள்ளைகளிடம் இருக்கும் கூடாத பழக்கத்தையும் இடித்துரைக்கத் தவறவில்லை.
தன் மனைவிக்கு மகட்பேறு என்று வந்தவுடனே ஓடோடி சென்று தன் தாயையும் தன் மனைவியினது தாயையும் உபசரித்து அவர்களை வெளிநாடு அழைத்து வந்து தங்க வைத்து சில, பல மாதங்களில் ஊருக்கு அனுப்பிவிடுவதில் நூறு சதவீத அன்பில்லை என்று சாடுகிறார். இந்த வெளிநாட்டில் பிள்ளைகளைப் பராமரிக்க வேலைக்கு ஆள்வைத்து கட்டுப்படி ஆகாது என்பதை மனதில் இருத்திக்கொண்டு பெற்ற தாயை செவிலித் தாயாய் நடத்தும் பிள்ளைகளை உணர்ந்து திருந்த வேண்டிக்கொண்டார்.
உலக சகோதரத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதை, யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று கணிகன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை விளக்கிக் கூறி அனைவருக்கும் விளங்க வைத்தார்.
தனிஈழம் குறித்து அவர் பேசுகையில், எனது வாழ்நாள் முடிவதற்குள்ளாகவே தனிஈழம் மலரும். இது சாதாரணமாக, வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லி விட்டு செல்லமுடியாது. சில சரித்திர நிகழ்வுகளை உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.
கிழக்கு தைமூரிலும், கொசோவாவிலும் ஏற்பட்ட இனப்பிரச்சினைகளுக்கும் ஈழத்தில் நடைபெற்றுவரும் இனப்பிரச்சினைக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஆனால் அந்த நாடுகள் முழுச் சுதந்திரம் பெற்று இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கின்றன.
செர்பியர்களுக்கும், அல்பேனியர்களுக்கும் சண்டை வந்த போது உலக நாடுகள் தலையிட்டு நல்ல தீர்வை அந்த நாடுகளுக்கு பெற்றுத் தந்துள்ளன. இவை நம் கண் முன் நடந்த வரலாறு. எனவே, உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் யாவரும் அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் கோரிக்கைகளை முன்வையுங்கள். உங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு விரைவில் கிட்டும்.
இந்தக் கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூடவேண்டும். தமிழகத் தமிழர் ஒருபுறமும் ஈழத்தமிழர் மற்றொரு புறமும் என்று இருக்காமல் அனைவரும் ஒன்றுகூடி உரத்த குரலில் எதிரொலிப்பீர்களேயானால் இன்றில்லாவிடினும் நாளை நல்ல தீர்வு வந்துசேரும் என்று அவர் கூறிய வார்த்தைகள் ஈழத்துப் போரில் நொந்த உள்ளங்களுக்கு அசரீரி வாக்காய் இருந்தது.
தொகுப்பு - ஆறு. குமாரசெல்வம்.